Home
  site logo  
  www.nadigarthilagam.com  
  Newsroom  
 
 
கலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 89வது பிறந்த நாள் விழா, சிவாஜி பிரபு சேரிட்டீஸ் அறக்கட்டளை சார்பில் 01.10.2017 அன்று சென்னை மியூஸிக் அகாடமி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. திரளான ரசிகர்கள் கூட்டம் அலைமோத, பிரபலங்கள் அணிவகுத்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருகை புரிய, சிறப்பான விழாவாக நடந்தேறியது. நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த திருமதி பாரதி விஷ்ணுவர்த்தன், திருமதி எஸ்.என்.பார்வதி, திரு வி.சி.குகநாதன், திரு விசு மற்றும் திரு லெனின் ஆகியோர் சிவாஜி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்ப்ட்டனர். மேலும் மூத்த சிவாஜி ரசிகர்கள் நெல்லை திரு அருணன், மதுரை திரு நாகராஜன் மற்றும் திருச்சி திரு சீனிவாசன் ஆகியோரும் நடிகர் திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் நடிகர் திலகம் விருது பெற்ற கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த பங்கு பெற்ற காட்சிகள் திரையிடப்பட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் கலைப்பணிகளும் - ஓர் ஆய்வு, எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திரு மருது மோகன் அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டார். அவருடைய ஆய்வேட்டின் பிரதி மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக லெஃடினென்ட் ஜெனரல் திரு ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றி்னார். அன்புச் சகோதரர் ராம்குமார் வரவேற்புரையாற்ற, இளைய திலகம் பிரபு நன்றி கூறினார். திருமதி கிருத்திகா சுர்ஜீத் அவர்கள் விழாவைத் தொகுத்தளித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுப்பரிசுடன் அமர்ந்திருக்கும் கலைஞர்கள். பின் வரிசையில் சிறப்பு விருந்தினர் திரு லெஃடினென்ட் ஜெனரல் ரவீந்திரன், திரு ராம்குமார், திரு பிரபு, திரு துஷ்யந்த், திரு விக்ரம் மற்றும் திரு கணேஷ்.
நடிகர் திலகம் விருதைப் பெற்ற மூத்த சிவாஜி ரசிகர் மன்ற உறுப்பினர்கள் திரு முருகவிலாஸ் நாகராஜன் (மத்தியில் அமர்ந்திருப்பவர்), திரு சீனிவாசன் (வலது ஓரம்). இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர் முனைவர் திரு மருதுமோகன் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாறும் கலைப்பணியும் எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட தன் ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டம் பெற்றவர்.
முனைவர் பட்ட ஆய்வேட்டினை அறிமுகம் செய்யும் காட்சி.
முனைவர் திரு மருதுமோகன் அவர்களின் ஆய்வேட்டினை பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறார் இளைய திலகம்.
 
விழாவின் காணொளி உங்கள் பார்வைக்கு. நன்றி யூட்யூப் இணையதளம் மற்றும் தரவேற்றியோருக்கு.
 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 01.10.2017 அன்று காலை நடைபெற்றது. மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு, மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு நடராஜ் அவர்கள், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு நாசர் அவர்கள், மற்றும் திரு கமலஹாசன் அவர்கள், திரு ரஜனிகாந்த் அவர்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பினைத் தொடர்ந்து இம்மணிமண்டபம் அமைக்கும் பணியைத் தமிழக அரசு மேற்கொண்டது.
 
இம்மணிமண்டபத்தில் நடிகர் திலகத்தின் சாதனைகள், அவர் ஆற்றிய சமூகத் தொண்டுகள், திரையுலகில் அவருடைய நடிப்பிற்கு கிடைத்த பல்வேறு விருதுகள் உள்பட அவருடைய தேசீய சேவை என்று அனைத்தையும் எடுத்துக் கூறும் வகையில் நிரந்தரமான கண்காட்சி ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என நமது இணையதளம் சார்பில் அரசைக் கேட்டுக்கொள்கிறோம். விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு.
. நன்றி யூட்யூப் இணையதளம் மற்றும் தரவேற்றியோருக்கு.
 
மதராஸ் ரோட்டரி கிளப் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சிவாஜி 90 என்ற தலைப்பில் 21.10.2017 அன்று மாலை சென்னை மியூஸிக் அகாடெமியில் சிறப்பாக நடைபெற்றது. பிரபல பியானோ இசை மேதை திரு அனில் சீனிவாசன் அவர்களின் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா, ஆலாப் ராஜூ, சத்யப்பிரகாஷ், சைந்தவி, நரேஷ் ஐயர் என இளம் பாடகர்கள் கலந்து கொண்டு நடிகர் திலகம் திரைப்படப்பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். வழக்கமான மெல்லிசை நிகழ்ச்சிகளைப் போலன்றி, நவீன காலத்தில் அவருடைய பாடல்கள் எப்படி ரசிகர்களை கவரச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதமான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. விழாவின் முத்தாய்ப்பாக நடிகர் திரு கமலஹாசன் மற்றும் திரு நாசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நடிகர் திலக்ததின் குடும்பத்தின் சார்பில் அன்புச்சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பின்னணியில் பிரம்மாண்டமான எல்ஈடி திரையில் நடிகர் திலகத்தின் கண்கவர் நிழற்படங்கள் திரையிடப்பட்டன. விழாவை ஏற்பாடு செய்த மதராஸ் ரோட்டரி கிளப் பிற்கு நமது பாராட்டுக்கள்.
 
புதிய பறவை திரைப்படத்தில் இடம் பெற்ற பார்த்த் ஞாபகம் இல்லையோ பாடலை ஆண்ட்ரியா அவர்கள் பாடிய போது.
 
 
 
     
     
     
உலகெங்கிலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நினைவு நாள் மற்றும் அவர் தொடர்பாக நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகள் பற்றி கிடைக்கப் பெறும் தகவல்கள் அவ்வப்போது தரவேற்றப் படுகின்றன. செய்திகள் பக்கத்தைத் தொடர்ந்து பாருங்கள்.
 
முகப்பிற்கு செல்ல HOME
 
முந்தைய செய்திகள், நிகழ்வுகள் பற்றிய விவரங்களுக்கு