site logo

இசைக் கச்சேரி
நடந்து கொண்டிருக்கும்.

ஒரு பாடல் முடிந்து
அடுத்த பாடல் வருவதற்கான
சில நிமிஷ இடைவெளியில்
தாள வாத்தியங்கள் அதிரும்...

தந்தி வாத்தியங்கள்
அதீதமாய் சுண்டப்படும்.

ஊதல் வாத்தியமொன்று
யானைக் குரலில் பிளிறும்.

ஏதோ ஒன்றில் 
எதையோ வைத்து அடித்து
உடுக்கையொலி போன்றதொரு ஒலி
எழுப்பப்படும்.

காதில் வந்து மோதும்
எந்தச் சத்தமும் 
ஒரு முழுமையோடு வாராது
நாராச இரைச்சலாய்ப் பாயும்.

அடுத்த பாடலுக்கான
ஒரு சுருக்க ஒத்திகைதான் அது
என்பது புரிந்தாலும்
அது என்ன பாடலென்று
சத்தியமாய்ப் புரியாது.

திடீரென்று மேடையும், சபையும்
மொத்தமாய் அமைதியாகும்.

ஒரு மேடைக் குரல்
" ஒன்.. ட்டூ ..த்ரீ " சொல்ல..
ஒரு ஊதல் வாத்தியத்திலிருந்து
" உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலின்
துவக்க இசை இனிமையாகப் புறப்பட...

மனதின் ஆழத்திலிருந்து
ஒரு கனத்த சோகம் 
பந்தாய் மேலெழும்பி
கண்ணீர்த் தொட்டி உடைத்து
மேலெங்கும் ஈரப்படுத்த...

பதினாறு ஆண்டுகளாய் நடக்கிறது
இந்தப் பரிதாபக் கதை.
*****

அய்யா... நடிகர் திலகமே!

உங்களுக்கான
எங்கள் பரிதவிப்பும், சோகமும்
சட்டென்று வெளிப்பட்டு
தீர்ந்து போகிற உணர்வுகளல்ல.

அவைகள்..
ஜென்மங்களுக்கு இடையே நீளும்
நமது அன்புப் பாலம்.

இதோ...

எங்களூர்ச் சுவர்கள்
உங்கள் திருவுருவம் தாங்கிய
சுவரொட்டிகளைப் 
போர்த்திக் கொள்ளத் துவங்கி விட்டன.

பசை வாளிகளோடு
பின்னிரவில் துவங்கிய
எங்கள் சிங்கங்களின் பயணங்கள்
வெயிலடிக்கும் காலையிலும்
முடிந்தபாடில்லை.

அவனது சுவரொட்டிகளில்
அய்யனே...
உங்களைப் போற்றும்
வாசகங்கள்.

ஆண்டவனே...
என் தலைவனைத் திருப்பித் தா என
உங்களுக்கான யாசகங்கள்.

கொடுமையாய்க் கடந்து போன
இந்தப் பதினாறு வருடங்களில்
அவன் உங்களைக்
கொஞ்சமும் மறக்கவில்லை.

மறக்க மாட்டான்.

சிவாஜி ரசிகன்
சாமர்த்தியசாலி.

காலம் குணசேகரனைச் சாகடித்தால்
அவன் ராஜசேகரனை உயிர்ப்பிக்கிறான்.

கட்டபொம்மனைக் கொன்றால்
ராஜராஜ சோழனைக் 
கொண்டு வருகிறான்.

வியட்நாம் வீடு பத்மநாபனை
வீழ்த்தினால்
ஆனந்த பவனம் ரவிக்குமாரை
எழுப்புகிறான்.

ரகுராமனை ஒளித்து வைத்தால்
ராஜனை வைத்துக்
கண்டுபிடிக்கிறான்.

சிவாஜி ரசிகன் 
சாமர்த்தியசாலி.
*****

அய்யா...
உங்களை இழந்த
உங்கள் ரசிகர்கள்...
உங்கள் தொண்டர்கள்...
சோர்ந்திருக்கலாம்.

சோகித்திருக்கலாம்.

செயலற்றுப் போய்விடவில்லை.

நீங்கள்
எங்களுக்கு
நீங்கள் தோன்றும்
காட்சிகளை மட்டும் காட்டவில்லை.

வாழ்க்கையைக்
காட்டியிருக்கிறீர்கள்.

காசோ.. வார்த்தையோ..
அள்ளி விடுவதல்ல அழகு..
அவசியத்துக்கு உபயோகிப்பதே
அழகென்று காட்டியிருக்கிறீர்கள்.

என்னத்தையாவது பேசி
அரசியலில் ஜெயிக்கக் கூடாது..
எண்ணத்தின் தூய்மையே
அரசியலென்று காட்டியிருக்கிறீர்கள்.

"முன்னே போகிறேன்.. பின்னே வா.."
என்று கடந்து போகாமல்
எங்கள் முன்னோடியாய்
நடந்து காட்டியிருக்கிறீர்கள்.

பலத்த காற்றுக்கு விரிகிற
புத்தகப் பக்கம் போல
எளிமையாய்.. யதார்த்தமாய்
நல்ல மனசு காட்டியிருக்கிறீர்கள்.

உங்கள் ரசிகர்கள் அனைவருமே
நடிப்புத் தொழில் செய்கிறவர்கள் அல்ல..
ஆனால்...
அவரவர் தொழிலில்
உங்களைப் போலவே
உண்மையான ஈடுபாட்டுடனிருக்க
வழி காட்டியிருக்கிறீர்கள்.

இதோ...
நீர் தளும்பும் 
எங்கள் விழிகளுக்கு நேரே
உங்கள் திருவுருவப் படம் இருக்கிறது.

உண்மையை மட்டுமே
பேசத் தெரிந்த
உங்கள் உதடுகளிரண்டும்
சிரிக்கிறது.

விழி மூடிக் கரம் குவிக்கிறோம்.

உளமார உறுதி ஏற்கிறோம்.

உங்கள் வழியில் செல்வோமென்றும்,
உங்களைப் போலவே வெல்வோமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

அடிதடி, வன்முறை 
மறுப்போமென்றும்,
அறவழி வெல்லும் வரை 
பொறுப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

எங்கள் கண்களுக்கெட்டிய
தலைமுறை வரைக்கும்
உங்களைக் கொண்டு சேர்க்கப்
பாடுபடுவோம் என்று
உறுதி ஏற்கிறோம்!

நீங்கள் காட்டிய நல்வழியில்
நடப்போருக்கு
செருப்பாயிருப்போமென்றும்,
உங்களைத் தவிர்ப்போருக்கும்,
பழிப்போருக்கும்
நெருப்பாயிருப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

தேசத்தின் பசியமர்த்தும்
சத்திய உணவுகள்
சமைப்போமென்றும்,
சீரும், சிறப்புமாய்
இங்கே
சிவாஜி தேசம் 
அமைப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

 
ஆதவன் ரவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
காங்கேயநல்லூரில் நடிகர் திலகத்தின் திருவுருவச்சிலை கடந்த 2.7.2017 அன்று நமது அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களால் திறந்து வைக்க்ப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனது காங்கேய நல்லூர். சிலையைத் திறந்து வைத்துப் பேசிய ராம்குமார் அவர்கள் வேலூர் என்றுமே நடிகர் திலகத்தின் நெஞ்சில் நிரந்தரமாக குடியிருக்கும் பெயர் என்றும் அவரை அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் அவர்களை நடிகர் திலகத்திற்குப் பின்னும் அவரது புதல்வர்களாகிய தாங்கள் தொடர்ந்து திரு பெருமாள் முதலியார் குடும்பத்தினரை பொங்கல் தோறும் நேரில் சென்று சந்தித்து நன்றி கூறி மரியாதை செலுத்தி விட்டு வந்துள்ளதை கூறினார். கூட்டம் முடிந்தவுடன் பெருமாள் முதலியார் வீட்டிற்கு அவர் நேரில் சென்று அவரது குடும்பத்தாருடன் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.